< Back
தேசிய செய்திகள்
அண்ணனுக்கு 434 மீட்டர் நீளத்தில் தங்கை எழுதிய கடிதம்... அப்படி என்னதான் அதுல எழுதி இருந்தார்..?
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு 434 மீட்டர் நீளத்தில் தங்கை எழுதிய கடிதம்... அப்படி என்னதான் அதுல எழுதி இருந்தார்..?

தினத்தந்தி
|
28 Jun 2022 12:50 PM IST

கேரளாவில் சகோதரருக்கு 434 மீட்டர் நீளம் கடிதம் எழுதிய பெண் ஒருவர் தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது சகோதரி, அரசுப் பொறியாளரான கிருஷ்ணப்ரியா. இவர் திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசிக்கிறார்.

சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று ஆண்டு தவறாமல் தன் சகோதரர் பிரசாத்துக்கு கடிதம் எழுதுவது கிருஷ்ணப்ரியாவின் வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக சர்வதேச சகோதரர் தினமான மே 24ல் அவரால் கடிதம் எழுத முடியவில்லை. இதையடுத்து தனக்கு ஓய்வு கிடைத்த மற்றொரு நாளில் அண்ணனுக்கு கடிதம் எழுதத் துவங்கினார்.

இதற்காக காகித ரோல்கள் 15 வாங்கி, எழுதத்தொடங்கினார். பிறந்தது முதல் இருவரும் வளர்ந்த, இருவருக்குள்ளும் நிகழ்ந்த சண்டை, செலுத்திய அன்பு என நீண்ட கடிதத்தை, 12 மணி நேரத்தில் அவர் எழுதி முடித்தார். பின்னர் அந்தக் கடித பார்சலை அண்ணன் கிருஷ்ண பிரசாத்துக்கு அனுப்பினார்.

தங்கையிடம் இருந்து வந்த பார்சலில், பரிசு தான் இருக்கிறது என கிருஷ்ணபிரசாத் நினைத்தார். ஆனால், அதில் இருந்த கடிதத்தை படிக்க படிக்க அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. கிருஷ்ணப்ரியா அனுப்பியிருந்த கடிதம் 5 கிலோ எடையும், 434 மீட்டர் நீளமும் இருந்தது.

இதைஅடுத்து, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள 'யுனிவர்சல் ரிக்கார்ட் போரம்' என்ற நிறுவனத்துக்கு, தங்கை தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பினார். இது 'உலக சாதனை' என அந்நிறுவனம் சான்றளித்து உள்ளது.

அண்ணனுக்கு அன்பாக கடிதம் எழுதி உலக சாதனை படைத்த கிருஷ்ணப்ரியாவுக்கு உறவினர்கள் மட்டுமின்றிஏராளமானோர் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்