சிறுத்தை தொடர் அட்டகாசம்; மக்கள் பீதி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
|சன்னகிரி அருகே கிராமங்களில் சிறுத்தை தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
சிறுத்தை அட்டகாசம்
தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகளான சிறுத்தை, புலி, கரடி போன்றவை இரைதேடி கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் வீடுகளில் வளர்த்து வரும் மாடு, ஆடு போன்ற கால்நடைகளையும், வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளையும் வேட்டையாடி செல்கிறது.
இதனால் அந்த கிராமங்களை சோ்ந்த மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சன்னகிரி தாலுகா ஆறாவது மைல்கல் கிராமத்திற்குள் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அந்த சிறுத்தையின் நடமாட்டம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை அந்த பகுதி மக்கள் பாா்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பூனையை அடித்து கொன்றது
இதேபோல் மாதேனஹள்ளி கிராமத்திலும் சிறுத்தை ஒன்று இரைதேடி புகுந்துள்ளது. இந்த சிறுத்தை அதே பகுதியை சோ்ந்த மகேஷ் என்பவர் வளா்த்து வந்த பூனையை அடித்து கொன்று கவ்வி சென்றது. இதன் காட்சிகள் அவர் வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
மேலும் அந்த கிராமத்தில் இருந்த தெருநாய்களும் காணாமல் போய் உள்ளது. தொடர்ந்து சிறுத்தைகள் அட்டகாசம் செய்வது பற்றி இரு கிராமங்களை சோ்ந்த மக்களும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை
அந்த தகவல் பேரில் வனத்துறை அதிகாரிகள் இரு கிராமங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து கிராம மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இரு கிராமங்களிலும் ஒரே சிறுத்தை அட்டகாசம் செய்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.இந்த 2 கிராமங்களை சோ்ந்த மக்களும் வேலைக்கு செல்லாமால் சிறுத்தை பீதியில் வீடுகளில் முடங்கி உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் ஏழாவது மைல்கல் கிராமத்தில் சிறுத்தை நடமாடியது குறிப்பிடதக்கது.