நிலவில் பள்ளம் இருந்த பகுதியை தவிர்த்து தள்ளி இறங்கிய லேண்டர்; இஸ்ரோ தகவல்
|விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது, கேமரா உதவியால் பள்ளம் இருந்த பகுதியை தவிர்த்து தள்ளி இறங்கியது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
பெங்களூரு,
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியால், அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
லேண்டர் தரையிறங்கியபோது, நிலவில் புழுதி படலம் ஏற்பட்டு உள்ளது. அது அடங்கிய பின்னர், லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து ஆய்வு பணியில் ஈடுபட தொடங்கும்.
இந்த நிலையில், நிலவில் லேண்டர் பாதுகாப்பான இடம் தேடி, தேர்வு செய்து இறங்கிய விவரங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டு உள்ளது. இதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும் முன்பு 150 மீட்டர் உயரத்தில் இருந்தபோது, அதற்கு நேர் செங்குத்து பகுதியில் பள்ளம் இருந்தது கண்டறியப்பட்டது.
இடர்பாடுகளை உணர்ந்து ஆபத்துகளை தவிர்ப்பதற்காக இணைக்கப்பட்ட கேமரா உடனடியாக செயல்பட்டு, படம் எடுத்து எச்சரிக்கை செய்துள்ளது. இது, லேண்டர் பாதுகாப்பாக தரையிறங்க உதவியது. இதனை இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
ஆபத்து தவிர்ப்பு கேமராவில் பதிவான புகைப்படம் மற்றும் லேண்டர் பாதுகாப்பாக சற்று தள்ளி இறங்கிய படமும் வெளியிடப்பட்டு உள்ளது. இதேபோன்று, நிலவில் இறங்கிய விக்ரம் லேண்டர், அதற்கு சிறிது நேரத்திற்கு முன் எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
லேண்டர் தரையிறங்கிய பின்னர், லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படமும் வெளிவந்து உள்ளது. அதில், சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி உள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது. நிலவில் சமதள பகுதியை தேர்வு செய்து சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கி உள்ளது.