< Back
தேசிய செய்திகள்
தி கேரளா ஸ்டோரி படம்; எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாளர்கள்: மத்திய மந்திரி இரானி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

தி கேரளா ஸ்டோரி படம்; எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாளர்கள்: மத்திய மந்திரி இரானி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
9 May 2023 9:29 PM IST

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக நிற்கும் ஒவ்வோர் அரசியல் கட்சியும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக நிற்பவை என மத்திய மந்திரி இரானி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நேற்று தடை விதித்தது. மாநிலத்தில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக்கான சம்பவம் எதுவும் நடந்து விடாமல் தவிர்ப்பதற்காகவும் மற்றும் மாநில அமைதியை காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் விளக்கம் கூறினார்.

எனினும், இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் எம்.பி. லாக்கட் சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, மம்தா பானர்ஜி ஒரு பெரிய தவறு செய்து விட்டார். அவருக்கு வங்காள மக்களை பற்றி தெரியவில்லை. தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அவர் தடை விதிக்கிறார் என்றால், அவர் இந்துவுக்கு எதிரான, இந்தியாவுக்கு எதிரான மற்றும் பெண்களுக்கு எதிரானவர் போன்று தோன்றுகிறது.

இந்த திரைப்படம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அடிப்படையாக கொண்டது. வேறு எதுவும் இல்லை. அவர், ஒரு வங்காள மொழி இயக்குநரான சுதீப்தோ சென்னின் படத்திற்கு தடை விதித்து இருக்கிறார். வங்காளிகளின் பெயரில் வாக்குகளை கேட்டு பெறும் மம்தா பானர்ஜி, முஸ்லிம்கள் பற்றிய ஒரு படத்திற்கு தடை விதிக்கின்றார் என கூறினார்.

தி கேரளா ஸ்டோரி படம் டிரைலர் வெளியானது முதல் பரபரப்புக்கு பஞ்சமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தொடங்கியது. 3 பெண்களின் உண்மை கதைகள் அடிப்படையில் படம் உருவாகி உள்ளது என கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது.

இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர்.

கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் டிரைலர் காட்சிகள் அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக திரையரங்குகளில் படம் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தில் கேரளாவிலும் கூட பல திரையரங்குகளில் படம் வெளியிடுவதற்கு, திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார். உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத்தும் வரி விலக்கு அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில் சாணக்யாபுரி பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று சென்றார். அவருடன் கட்சியினரும் சென்றனர்.

அதற்கு முன் மத்திய மந்திரி இரானி செய்தியாளர்களிடம் கூறும்போது, நான், தி கேரளா ஸ்டோரி படம் பார்க்க போகிறேன். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விரும்பாத அளவுக்கு என்ன உள்ளது என்று படம் பார்த்து விட்டு வந்து உங்களிடம் கூறுவேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதன்படி, படம் பார்த்த பின்பு, திரையரங்கை விட்டு வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக நிற்க கூடிய ஒவ்வோர் அரசியல் கட்சியும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக நிற்பவை என்பது ஒரு பெற்றோராக எனது நம்பிக்கை ஆகும். நம்முடைய நாட்டு மக்களை அனுமதிக்காத அந்த அரசியல் அமைப்புகள், அதுபோன்ற பயங்கரவாத விசயங்களுக்கு ஆதரவாக துணை நிற்பவை ஆகும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்