< Back
தேசிய செய்திகள்
தி கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரம்: மேற்கு வங்காளம், தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
தேசிய செய்திகள்

'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட விவகாரம்: மேற்கு வங்காளம், தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

தினத்தந்தி
|
12 May 2023 3:46 PM IST

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க மேற்கு வங்காளம் மற்றும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இந்த திரைப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படம் திரையிட தடை விதிப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த படம் வெறுப்புணர்வையும் வன்முறையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் படத்தை தடை செய்வதாக அவர் கூறினார்.

அதேபோல், தமிழகத்திலும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடுவதை திரையரங்கு உரிமையாளர்கள் நிறுத்தி விட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படத்தை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில், திரைப்படத்திற்கு மத்திய சான்றளிப்பு வாரியம் சான்றளித்த பிறகு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்துக்கான தடையை விதிக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு வங்காளத்தில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'தி கேரள ஸ்டோரி' திரைப்படத்தை திரையிட வழங்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு கூறி தமிழக அரசுகுக் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல், படத்திற்கு தடை விதித்த மேற்கு வங்காள அரசும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரு மாநில அரசுகளும் வரும் புதன்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வியாழக்கிழமைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்