'தி கேரளா ஸ்டோரி' பட வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|‘தி கேரளா ஸ்டோரி’ பட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தப் படம் பார்க்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
'தி கேரளா ஸ்டோரி ' என்ற திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 5-ந் தேதி வெளியானது. சுதிப்தோ சென் இயக்கத்தில் ஆதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, தேவதர்சினி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் கேரளாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம், கேரளாவின் பிற மதப்பெண்களை மதமாற்றம் செய்து, பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தப் படத்துக்கு மேற்கு வங்காளத்தில் தடை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லாத நிலையில் தியேட்டர்களை விட்டு இந்தப் படத்தைத் தூக்கி விட்டனர்.
மேற்கு வங்காளத்தில் விதிக்கப்பட்ட தடையையும், தமிழ்நாட்டின் திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டதை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் 'தி கேரளா ஸ்டோரி ' படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடுத்துள்ளார்.
இதே போன்று இந்தப் படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க மறுத்த கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து குர்பான் அலி என்ற பத்திரிகையாளரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரிக்கிறது.
இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, படத்தில் 32 ஆயிரம் பெண்களை மதம் மாற்றியதாக கூறியிருப்பதற்கு மறுப்பு வெளியிட வேண்டும், குறிப்பாக ''மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கைக்கு அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை; இந்தப் படம் கற்பனையானது'' என்று 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் படத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று படத்தயாரிப்பாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்தப் படத்துக்கு மேற்கு வங்காள அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
அத்துடன், இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்படவில்லை என்ற பதிலைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், படம் பார்க்கச் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
படத்துக்கு தணிக்கை வாரியம் தணிக்கைச்சான்றிதழ் வழங்கி விட்ட நிலையில், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்தப் படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது முடிவு எடுப்பதற்கு முன்பாக இந்தப் படத்தைப் பார்க்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 2-ம் வாரம் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.