தி கேரளா ஸ்டோரி பட விவகாரம்; வங்காள இயக்குநரின் படத்திற்கு தடையா..? மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.
|மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்த விவகாரத்தில் வங்காள இயக்குநரின் படத்திற்கு தடையா..? என மம்தா பானர்ஜியை பா.ஜ.க. சாடியுள்ளது
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்து உள்ளது. மாநிலத்தில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக்கான சம்பவம் எதுவும் நடந்து விடாமல் தவிர்ப்பதற்காகவும் மற்றும் மாநில அமைதியை காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. லாக்கட் சாட்டர்ஜி, மம்தாவை சாடியுள்ளார். அவர் ஒரு பெரிய தவறு செய்து விட்டார். அவருக்கு வங்காள மக்களை பற்றி தெரியவில்லை. தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அவர் தடை விதிக்கிறார் என்றால், அவர் இந்துவுக்கு எதிரான, இந்தியாவுக்கு எதிரான மற்றும் பெண்களுக்கு எதிரானவர் போன்று தோன்றுகிறது.
இந்த திரைப்படம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அடிப்படையாக கொண்டது. வேறு எதுவும் இல்லை. அவர், ஒரு வங்காள மொழி இயக்குநரான சுதீப்தோ சென்னின் படத்திற்கு தடை விதித்து இருக்கிறார். வங்காளிகளின் பெயரில் வாக்குகளை கேட்டு பெறும் மம்தா பானர்ஜி, முஸ்லிம்கள் பற்றிய ஒரு படத்திற்கு தடை விதிக்கின்றார் என்று கூறியுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படம் டிரைலர் வெளியானது முதல் பரபரப்புக்கு பஞ்சமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தொடங்கியது. 3 பெண்களின் உண்மை கதைகள் அடிப்படையில் படம் உருவாகி உள்ளது என கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது.
இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர்.
கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் டிரைலர் காட்சிகள் அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக திரையரங்குகளில் படம் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தில் கேரளாவிலும் கூட பல திரையரங்குகளில் படம் வெளியிடுவதற்கு, திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார். படம் வெளிவந்து மூன்று நாளில் ரூ.35 கோடி வசூலித்து உள்ளது.