< Back
தேசிய செய்திகள்
மக்களவை தேர்தலுக்கு தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்த ஐக்கிய ஜனதாதளம்
தேசிய செய்திகள்

மக்களவை தேர்தலுக்கு தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்த ஐக்கிய ஜனதாதளம்

தினத்தந்தி
|
3 Jan 2024 5:22 PM IST

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக சமீபத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடெல்லி,

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்து வந்த ராஜிவ் ரஞ்சன் சிங், கடந்த மாதம் 29-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளரை ஐக்கிய ஜனதாதளம் இன்று தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அஃபாக் அகமது கூறுகையில், நிதிஷ் குமார் அறிவுறுத்தலின்படி அருணாச்சல பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர் ரூஹி தாங்குங் நிறுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைமைக்கு குறிப்பிடத்தக்க பதவி வழங்கப்படவில்லை என அக்கட்சியினரிடையே அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், சமீபத்தில் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசை ஐக்கிய ஜனதாதளம் கடுமையாக விமர்சித்தது. இந்த சூழலில், கூட்டணி விவகாரத்தில் நிதிஷ் குமாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்