எம்.எல்.ஏ.க்களை திருடர்கள் என கூறிய விவகாரம்; சஞ்சய் ராவத் 2 நாட்களில் பதிலளிக்க சபாநாயகர் உத்தரவு
|மராட்டிய சட்டசபை எம்.எல்.ஏ.க்களை திருடர்கள் என சஞ்சய் ராவத் கூறிய விவகாரத்தில் பா.ஜ.க. உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.
புனே,
மராட்டிய சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பணவீக்கம், விவசாயிகளுக்கான மின்சாரம் துண்டிப்பு மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் சட்டசபை எம்.எல்.ஏ.க்களை திருடர்கள் என கூறிய விவகாரம் அவையில் சூடு பிடித்தது.
அவரை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இந்த விவகாரத்தில் அவையில் பா.ஜ.க. எம்.எல்.சி. பிரவீன் தரேக்கர் பேசும்போது, இந்த அவையில் உள்ள உறுப்பினர்களை சஞ்சய் ராவத் திருடர்கள் என அழைத்து உள்ளார்.
இது ஆளும் கட்சிக்கு மட்டுமே ஏற்பட்ட அவமதிப்பு அல்ல. சட்டசபையில் உத்தவ் ஜி தாக்கரேவும் உறுப்பினராக உள்ளார். ராவத்துக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என அவை உறுப்பினர்கள் சார்பில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து ராவத் கூறிய தனது பேச்சுக்கு உரிய பதிலளிக்கும்படி சபாநாயகர் ராகுல் நர்வேகர் உத்தரவிட்டு உள்ளார்.
நர்வேகர் கூறும்போது, ராவத்தின் பேச்சு மராட்டிய சட்டசபை, மராட்டியம் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட ஓர் அவமதிப்பு. இந்த விசயத்தில் ஒரு விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இந்த விசாரணையை 2 நாட்களில் முடிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இதுபற்றி வருகிற 8-ந்தேதி எனது முடிவை சட்டசபையில் வெளியிடுவேன் என சபாநாயகர் கூறியுள்ளார். இதன்பின்னர் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளியால், சட்டசபை இன்று 4-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும்.