< Back
தேசிய செய்திகள்
சர்வதேச பசி குறியீடு, பசி பற்றிய அளவீட்டை மிகைப்படுத்தி கூறியுள்ளது; மத்திய சுகாதார அமைச்சகம்
தேசிய செய்திகள்

சர்வதேச பசி குறியீடு, பசி பற்றிய அளவீட்டை மிகைப்படுத்தி கூறியுள்ளது; மத்திய சுகாதார அமைச்சகம்

தினத்தந்தி
|
18 Oct 2022 10:27 PM IST

சர்வதேச பசி குறியீடு, பசி பற்றிய அளவீட்டை மிகைப்படுத்தியும், புள்ளி விவரங்கள் பற்றாக்குறையுடனும் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 101-வது இடத்தில் இருந்தது.

ஒரே ஆண்டில் இந்தியா 6 இடங்கள் பின் தங்கியுள்ளது. வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளை விட இந்தியா பட்டியலில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.

இதுபற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த குறியீட்டை கணக்கிட எடுத்து கொண்ட 4 காரணிகளில் 3 காரணிகள் குழந்தைகளின் சுகாதாரத்துடன் தொடர்புடையவை.

ஒட்டுமொத்த மக்கள் தொகையின் பிரதிநிதித்துவம் பெற்ற கணக்கீடாக அதனை எடுத்து கொள்ள முடியாது. இதேபோன்று, மிக முக்கியத்துவம் வாய்ந்த 4-வது காரணியான, ஊட்டச்சத்து குறைவான மக்கள் தொகை விகிதம் பற்றிய மதிப்பீடானது, 3 ஆயிரம் பேரிடம் என்ற மிக சிறிய அளவிலான நபர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கை, அடிப்படை உண்மையை விட்டு விலகியிருப்பதுடன், கொரோனா பெருந்தொற்று போன்ற காலத்தில் மக்களின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்காக அரசு மேற்கொண்ட முயற்சிகளை உள்நோக்கத்துடனேயே புறந்தள்ளியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், இந்த தோல்விக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறினர். இந்த தரவரிசை பற்றிய அறிக்கையை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் நிராகரித்து இருந்தது.

இந்த மதிப்பீட்டில், குழந்தைகளின் சுகாதார காரணிகள் அடிப்படையில் பசி அளவீடானது அறிவியல் ரீதியாகவோ அல்லது பகுத்தறிவுக்கு உட்பட்டோ இல்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களது மதிப்பீடுகள் தவறானவை.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, வயதுக்கேற்ற உயரம் இல்லாத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விகிதம் 38.4 சதவீதத்தில் இருந்து (2015-16-ம் ஆண்டு) 35.5 சதவீதம் (2019-21-ம் ஆண்டு) என்ற அளவுக்கு குறைந்து உள்ளது.

இதுவே, உடல் எடைக்கு தகுந்த உயரம் என்பது 21 சதவீதத்தில் இருந்து (2015-16-ம் ஆண்டு) 19.3 சதவீதம் (2019-21-ம் ஆண்டு) என்ற அளவுக்கு குறைந்து உள்ளது. எடைக்கேற்ற வயது என்ற விசயத்தில் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் 35.8 சதவீதத்தில் இருந்து (2015-16-ம் ஆண்டு) 32.1 சதவீதம் (2019-21-ம் ஆண்டு) என்ற அளவுக்கு குறைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலைமை இப்படி இருக்கும்போது, சர்வதேச பசி குறியீடு, பசி பற்றிய அளவீட்டை மிகைப்படுத்தியும், புள்ளி விவரங்கள் பற்றாக்குறையுடனும் உள்ளது என்றும் இந்தியாவின் மதிப்பு சீர்குலையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்