'இந்தியா' கூட்டணி தோல்வியடைந்துள்ளது - ஜே.பி.நட்டா பேச்சு
|குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
பாட்னா,
பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜே.பி.நட்டா கூறியதாவது:-
நிதிஷ்குமார் ஜி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியது எங்களுக்கு (பாஜகவிற்கு) மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஜேடியு மற்றும் நிதிஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே.
இந்தியா கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி; அது பலிக்காது. 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை', 'பாரத் ஜோடோ யாத்திரை' மற்றும் இந்தியா கூட்டணி கருத்து ரீதியாக தோல்வியடைந்துள்ளது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி.
பீகாரில் என்.டி.ஏ., ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி பெரும் பாய்ச்சலில் சாதனை படைக்கும். மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி 2025ல் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.