< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி என்ற மாயத்தோற்றம் தகர்த்து எறியப்பட்டுள்ளது - டி.ராஜா கருத்து
தேசிய செய்திகள்

'பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி என்ற மாயத்தோற்றம் தகர்த்து எறியப்பட்டுள்ளது' - டி.ராஜா கருத்து

தினத்தந்தி
|
13 May 2023 6:24 PM IST

மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வெற்றியின் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகளின் மாயத்தோற்றம் தகர்த்து எறியப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப்பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். பா.ஜ.க. எந்த மாநிலங்களில் ஆட்சி செய்கிறது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

தென் மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க. அல்லாத அரசுகள் ஆட்சியில் இருக்கின்றன. அதேபோல ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. அதிகாரத்தில் இல்லை. மராட்டிய மாநில அரசு இப்போது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் ஆட்சி இல்லை. எனவே

பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி என்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகளின் மாயத்தோற்றம் தகர்த்து எறியப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்" என்று டி.ராஜா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்