சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் உரிமையாளர் போக்சோவில் கைது
|சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒட்டல் உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மங்களூரு;
பாலியல் தொல்லை
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கல்லடுக்கா பகுதியை சேர்ந்தவர் முகமது அஷ்ரப். அவர் கல்லடுக்காவில் இருந்து விட்டலா செல்லும் சாலையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது ஓட்டலுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை ேசர்ந்த சிறுவன் ஒருவர் சிக்கன் வாங்க வந்துள்ளான்.
அப்போது முகமது அஷ்ரப், அந்த சிறுவனிடம் கடைக்கு உள்ளே சென்று கைப்பையை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இந்த சிறுவனும் கடைக்கு உள்ளே சென்றுள்ளான். அப்போது முகமது அஷ்ரப், அவன் பின்னால் சென்று சிறுவனை தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
கொலை மிரட்டல்
மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக முகமது அஷ்ரப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுவன் இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சிறுவன் கல்லடுக்கா மார்க்கெட்டில் உள்ள கடையில் பால் வாங்குவதற்காக சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான்.
அப்போது மீண்டும் அஷ்ரப் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுவன், அவரை தடுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த முகமது அஷ்ரப், அவனை தாக்கி உள்ளார். அவரது பிடியில் இருந்து தப்பிய சிறுவன், நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி உள்ளான்.
போக்சோவில் கைது
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் உடனே புத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே முகமது அஷ்ரப் தலைமறைவானார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முகமது அஷ்ரப்பை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.