< Back
தேசிய செய்திகள்
கோலாரில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
தேசிய செய்திகள்

கோலாரில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

கோலார் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகின.

கோலார் தங்கவயல்

விடிய, விடிய கனமழை

கோலாா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

இதனால் கோலார் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. நேற்று முன்தினமும் கோலார் மாவட்டத்தில் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. ஆனால் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் கோலார் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கோலார் மட்டுமின்றி கோலார் தங்கவயல், பங்காருபேட்டை, மாலூர், முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய பகுதிகளில் இரவில் பலத்த மழை கொட்டியது.

இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதன்பிறகும் மழை பெய்து கொண்டே இருந்தது. கோலார் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழையால் மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கோலார் தங்கவயல் பகுதிகளில் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

பயிர்கள் நாசம்

மேலும் பங்காருபேட்டை, மாலூர், முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு சாகுபடி செய்திருந்த பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

இதன்காரணமாக விவசாயிகளுக்கு சுமார் ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோலார் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்