< Back
தேசிய செய்திகள்
கிரகலட்சுமி திட்டம் வருகிற 27-ந் தேதி தொடங்கப்படும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

கிரகலட்சுமி திட்டம் வருகிற 27-ந் தேதி தொடங்கப்படும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
10 Aug 2023 9:06 PM GMT

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் வருகிற 27-ந் தேதி தொடங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கிரகலட்சுமி திட்டம் குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று தனது துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயனை பெற இதுவரை 1 கோடியே 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த திட்டத்தை வருகிற 20-ந் தேதி இந்த திட்டத்தை தொடங்க முடிவு செய்து இருந்தோம். ஆனால் சில காரணங்களால் இந்த திட்டம் வருகிற 27-ந் தேதி பெலகாவியில் தொடங்க முடிவு செய்துள்ளோம்.

அன்றைய தினம் மாவட்ட, தாலுகா, கிராம பஞ்சாயத்து, வார்டு மட்டத்தில் மொத்தம் 11 ஆயிரம் இடங்களில் விழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். பயனாளிகள் அன்றயை தினம் தங்களின் வீடுகள் முன்பு கோலம் போட்டு தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள். கட்சி சார்பற்ற முறையில் இந்த திட்ட தொடக்க விழாவை நடத்துகிறோம். இந்த திட்ட தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அன்றைய தினம் பயனாளிகள் அனைவருக்கும் நடப்பு மாதத்திற்கான தொகை ரூ.2 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்