கவர்னரின் உரை பொய் மூட்டை- பசவராஜ் பொம்மை விமர்சனம்
|கவர்னரின் உரை பொய் மூட்டை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
பெங்களூரு:-
கவர்னரின் உரை குறித்து முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வெட்கம் இல்லையா?
கவர்னரின் உரையில் எதுவும் இல்லை. புதிய அரசு வரும்போது, அதன் பாதை என்ன, எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை குறிப்பிடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அந்த விஷயங்கள் எதுவும் இல்லை. இது ஒரு முன்னோட்டம் இல்லாத உரை. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் இல்லை. கவர்னரின் உரை பொய் மூட்டை ஆகும்.
ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் கையெழுத்து போட்டு மக்களுக்கு உத்தரவாத அட்டை கொடுத்தனர். ஆனால் இப்போது அரிசி வழங்காமல் மத்திய அரசு அரிசி கொடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். 5 கிலோ அரிசியை மத்திய அரசு தான் வழங்குகிறது. அந்த அரிசியை உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி வழங்குவதாக காங்கிரசார் சொல்கிறார்கள். இவ்வாறு சொல்ல அவர்களுக்கு வெட்கம் இல்லையா?.
தகுதியானவர்கள்
அதிகாரிகள் பணி இடமாற்றத்திற்கு ரூ.30 லட்சம் கேட்பதாக குமாரசாமி சொல்கிறார். அது சிறிய பதவியாக இருக்கும். முக்கிய அதிகாரிகள் பணி இடமாறுதலுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கைமாறுகிறது. தான் நேர்மையாக இருப்பதாக சித்தராமையா சொல்கிறார். ஆனால் முதல்-மந்திரி அலுவலகத்தில் நடைபெறும் விஷயங்களை பார்க்கும்போது பயமாக உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது நாளைக்குள் (இன்று) முடிவாகும். அந்த பதவிக்கு எங்கள் கட்சியில் 66 பேரும் தகுதியானவர்கள் தான். பிட்காயின் முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்திருப்பது நல்ல விஷயம் தான். இந்த அரசு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் விசாரணை நடத்தட்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.