< Back
தேசிய செய்திகள்
நைஸ் நிறுவன திட்டத்தை அரசு தன்வசம் எடுக்க வேண்டும்: குமாரசாமி வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

நைஸ் நிறுவன திட்டத்தை அரசு தன்வசம் எடுக்க வேண்டும்: குமாரசாமி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
24 July 2023 1:32 AM IST

நைஸ் நிறுவன திட்டத்தை அரசு தன்வசம் எடுக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா ஏதாவது காரணங்களை கூறாமல் நைஸ் ரோடு திட்டத்தை அரசு வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும். சித்தராமையா இப்போது கர்நாடக முதல்-மந்திரி. எனக்கும் முதல்-மந்திரி, மகாதேவப்பாவுக்கும் முதல்-மந்திரி, காகா பட்டீலுக்கும் முதல்-மந்திரி என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்களை பொய்ராமையா என்று சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.

ஏனெனில் உங்களின் பெயரிலேயே ராமர் உள்ளார். நைஸ் திட்டம் தொடர்பாக தற்போது சட்டத்துறை மந்திரியாக உள்ள எச்.கே.பட்டீல் தலைமையிலான சட்டசபை கூட்டுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை வழங்கியது. அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முதல்-மந்திரி பார்க்க வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது நைஸ் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சித்தராமையா கேட்கிறார்.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, நைஸ் நிறுவனத்தின் சட்டவிரோத செயல்களை தடுத்தோம். அந்த நிறுவனம் அதிகாரிகளை மிரட்டும் செயலை நிறுத்தினோம். கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. நைஸ் விவகாரத்தில் எனக்கு வந்த அழுத்தங்கள் குறித்து சித்தராமையாவுக்கும் தெரிந்து இருக்க வேண்டும்.

அப்போது நீங்களும், உங்களின் குழுவும் எனக்கு தினமும் கொடுத்த இடையூறுகளை மறக்க முடியுமா?. உங்களின தயவில் ஆட்சி செய்த என்னால் உங்கள் கட்சியை சேர்ந்தவரின் நைஸ் நிறுவனம் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் தைரியம் எனக்கு இருக்கவில்லை. இந்த உண்மையை ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் தான் சொன்னபடி நடந்து கொள்ளும் ஆட்சியை நடத்துகிறீர்களே. அதனால் நைஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?.

உங்களால் நியமிக்கப்பட்டு சட்டசபை கூட்டுக் குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் நீங்கள் காலத்தை விரயமாக்க வேண்டாம். பெரும்பான்மை இருந்தால் மட்டும் போதாது, அர்ப்பணிப்பு உணர்வு இருக்க வேண்டும். நான் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தது எவ்வளவு உண்மையோ, அதை தடுக்க நீங்கள் ஒவ்வொரு நிலையிலும் முயற்சி செய்ததும் உண்மையே. பாக்ய திட்டங்களுக்கு நிதியை குறைக்கக்கூடாது என்று கூறி எனக்கு நீங்கள் கொடுத்த சித்ரவதை பொய்யா?, பலமான குரலில் பொய்யை சொன்னால் அது உண்மையாகிவிடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்