நைஸ் ரோடு திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி முறைகேடு குறித்து விசாரிக்க அரசு மறுக்கிறது; குமாரசாமி குற்றச்சாட்டு
|நைஸ் ரோடு திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி முறைகேடு நடந்தது பற்றி விசாரிக்க அரசு மறுப்பதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நடந்த ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநாட்டில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-
கடந்த 2006-ம் ஆண்டு நான் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தேன். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அன்று அந்த முடிவை எடுத்தேன். அப்போது எனது தந்தையை எதிர்த்து, அந்த முடிவு எடுத்தேன். எனக்கு முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அப்போது நல்ல முதல்-மந்திரி என்ற பெயர் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்திலும் எனக்கு பிரச்சினைகள் இருந்தன. ஆனாலும் அவற்றை சமாளித்து நல்லாட்சி நிா்வாகத்தை நடத்தினேன்.
நைஸ் ரோடு திட்ட முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. அந்த நைஸ் நிறுவனம் 14 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை முறைகேடு செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் கோடி ஆகும்.
உத்தரவாத திட்டங்களால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் என்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். எந்த முடிவும் எடுக்க விடவில்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க நீங்கள் விரும்புகிறீர்கள். கர்நாடகத்தின் வளங்களை பாதுகாக்க பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம்.
நான் 2 முறை முதல்-மந்திரியாக இருந்தேன். 2 முறையும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தேன். இந்த ஆட்சியில் கொள்ளையடிக்கிறார்கள். கர்நாடகத்தை கொள்ளையடித்து காங்கிரசை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். மின் கொள்முதல், குப்பையிலும் கொள்ளையடிக்கிறார்கள். எங்கள் கட்சியை சித்தராமையா குறை சொல்கிறார். பா.ஜனதாவில் சித்தராமையா முயற்சி செய்தார். அதனால் நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விமர்சிக்க அவருக்கு தகுதி இல்லை.
பிரதமர் மோடியை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். காங்கிரசுக்கு எதிராக தான் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி தோற்றுவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணி தலைவர்கள் யாரும் தேவேகவுடாவை தொடர்பு கொள்ளவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சியை அழிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. காங்கிரஸ் அரசு தற்காலிகமானது.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.