மராட்டியத்துடன் எல்லை பிரச்சினையில் சட்ட போராட்டம் நடத்த அரசு தயார்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
|மராட்டியத்துடன் உள்ள எல்லை பிரச்சினையில் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
தாவணகெரேயில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சட்ட போராட்டத்திற்கு தயார்
கர்நாடகம், மராட்டியம் இடையே உள்ள எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மராட்டிய எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களின் ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எந்த விவகாரத்தை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் பேச வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்.
மராட்டிய மாநிலத்தின் உள்ள எல்லை பிரச்சினை விவகாரத்தில் சட்ட போராட்டம் நடத்த அரசு தயாராக உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. பெலகாவி எல்லை பிரச்சினையை கையில் எடுத்து சரத்பவார் நீண்ட நாட்களாக அரசியல் செய்து வருகிறார். பெலகாவியை மராட்டியத்துடன் சேர்த்து விட வேண்டும் என்ற அவரது கனவு ஒரு போது நிறைவேறாது. மராட்டிய மாநில எல்லையில் வசிக்கும் மக்கள் கர்நாடகத்துடன் சேரவே விரும்புகின்றனர்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
மராட்டியத்திற்கு செல்லும் கர்நாடக பஸ்கள் மீது கற்களை வீசுவது, கருப்பு மை பூசுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது. இது சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மராட்டியத்தில் வசிக்கும் கர்நாடக மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அங்கு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது குறித்தும் அந்தமாநில உள்துறை அதிகாரிகளுடன் பேசும்படி, போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கர்நாடக உள்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸ் மந்திரியும், அந்த மாநில அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். அதே நேரத்தில் எல்லை பிரச்சினையில் சுப்ரீம் கோட்டில் நடக்கும் விவாதத்தில் கர்நாடக அரசு சார்பில் மூத்த வக்கீலான முகில் ரோத்தகி, உதயகொல்லி தலைமையில் நமது தரப்பு வாதங்களை முன்வைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.