நகை திருட்டை பார்த்த சிறுமி எரித்து கொலை... 10-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்
|டியூசன் செல்கிறேன் என பொய் கூறி விட்டு அந்த மாணவன், சிறுமியின் வீட்டுக்கு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான்.
குருகிராம்,
அரியானாவின் குருகிராம் நகரில் செக்டார் 107 பகுதியில் இரு குடும்பங்கள் அருகருகே வசித்து வருகின்றன. இரு வீட்டாரும் நட்புடன் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களில் ஒரு குடும்பத்தில் இருந்த, 4-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி நேற்று காலை வீட்டில் பாதி எரிந்த நிலையில் கிடந்திருக்கிறார். இது தெரியாமல் பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய சிறுமியின் தாயார், இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தனர். அப்போது, வீட்டின் மூலையில் இருந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
10-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவன், தொடக்கத்தில், 2 திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை கொலை செய்து விட்டு தப்பினர் என கூறியுள்ளான். எனினும், சந்தேகத்தின்பேரில் தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், சிறுமியை படுகொலை செய்த விவரங்களை மாணவன் ஒப்பு கொண்டான்.
கடனாக வாங்கிய ரூ.20 ஆயிரம் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டில் மாணவன் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுபற்றி ராஜேந்திரா பார்க் காவல் நிலைய போலீசார் கூறும்போது, சிறுமியின் தந்தை நேற்று காலை வேலைக்கு சென்ற பின்னர், மாணவனின் வீட்டுக்கு சிறுமியின் தாய் மற்றும் சகோதரர் சென்றுள்ளனர்.
இதனை பயன்படுத்தி, அந்த மாணவன் டியூசன் செல்கிறேன் என பொய் கூறி விட்டு, சிறுமியின் வீட்டுக்கு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான். சிறுமியிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்து விட்டு, வீட்டுப்பாடம் எழுத சிறுமிக்கு உதவியும் செய்திருக்கிறான்.
சிறுமி கழிவறைக்கு சென்றதும், படுக்கையறையில் இருந்த டிராயரை திறந்து அதில் இருந்த லாக்கர் சாவிகளை கொண்டு சில நகைகளை திருடியிருக்கிறான். அப்போது திரும்பி வந்த சிறுமி, நகையை பார்த்ததும் அதனை மாணவனிடம் இருந்து பறிக்க முயன்றபோது, ஜன்னல் வழியே மாணவன் நகையை வெளியே வீசியுள்ளான்.
ஆனால், சிறுமி தொடர்ந்து போராடி இருக்கிறது. இதனால், சிறுமியை மாணவன் கடுமையாக தாக்கியுள்ளான். பின்பு, வீட்டில் இருந்த கற்பூர கட்டிகளை எடுத்து, சிறுமியின் உடலில் தீப்பற்றி எரிய வைத்துள்ளான்.
சிறுமியின் தாய் வந்தபோது, வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனால், பயந்து போய் சத்தம் போட்டதும் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்துள்ளனர். இதன்பின்பே போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்து, தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிறுவனின் சில நண்பர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.