< Back
தேசிய செய்திகள்
வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரர்
தேசிய செய்திகள்

வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரர்

தினத்தந்தி
|
25 May 2024 4:24 PM IST

தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரரை 10 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.

காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் 10 வயது சிறுமி கடந்த 15-ந் தேதி அதிகாலை தனியாக உறங்கி கொண்டிருந்தாள். அப்போது சிறுமியின் தாத்தா பசு மாட்டில் பால் கறப்பதற்காக, கதவை திறந்து வைத்து விட்டு பின்புற வாசல் வழியாக மாட்டு தொழுவத்திற்கு சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, உறங்கி கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்றார். வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதோடு சிறுமி காதில் அணிந்திருந்த ½ பவுன் கம்மல்களை திருடி கொண்டும், சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.

இதையடுத்து சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு காஞ்சங்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுதொடர்பாக காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிஜோய், இன்ஸ்பெக்டர் ஆசாத் மற்றும் போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். காஞ்சங்காடு, ஹோஸ் துர்க் போலீசார் தனிப்படை அமைத்து, மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வந்தனர். சிறுமியின் வீட்டருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது அவளது பக்கத்து வீட்டில் வசிக்கும் சலீம் (வயது 36) என்பதும், அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அவரது புகைப்படத்தை பிற மாநில போலீசாருக்கு அனுப்பி தேடினர். சலீம் செல்போன் பயன்படுத்தாமல் இருந்ததால், அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சலீம் செல்போன் மூலம் தனது குடும்பத்தினரை ஒரு முறை தொடர்பு கொண்ட போது, அவர் ஆந்திராவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்து சலீமை கைது செய்தனர். பின்னர் அவரை அங்கிருந்து காசர்கோடு அழைத்து வந்தனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், 10 நாட்களுக்கு பின்னர் தலைமறைவானவர் கைதானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்