< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜெர்மனி அதிபர்
தேசிய செய்திகள்

டெல்லியில் சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜெர்மனி அதிபர்

தினத்தந்தி
|
26 Feb 2023 6:20 PM IST

இந்திய சுற்றுப்பயணத்தில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் டெல்லியில் சாலையோர கடை ஒன்றில் தேநீர் வாங்கி அருந்தி, கடைக்காரர்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.



புதுடெல்லி,


இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லிக்கு வந்துள்ளார்.

அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அளவிலான வர்த்தக குழுவினரும் வந்துள்ளனர். இந்த பயணத்தில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்சுக்கு ராஷ்டிரபதி பவனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேசினார்.

இதன்பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர்.

இதில் பிரதமர் மோடி பேசும்போது, ஐரோப்பிய பகுதியில் மிக பெரிய வர்த்தக நட்புறவு நாடாக ஜெர்மனி உள்ளதுடன், இந்தியாவில் முதலீடு செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் வலுவான உறவுகள், பரஸ்பர நலன்களுக்கான ஜனநாயக மதிப்புகளை பகிர்ந்து கொள்ளும் விசயங்களை அடிப்படையாக கொண்டவை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் மிக பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டு உள்ளார். இந்த சந்திப்பில், இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் பேசும்போது, இந்தியா மிக பெரிய அளவில் வளர்ந்து உள்ளது. அது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு மிக நல்லது. இந்தியாவுக்கு கடந்த முறை வந்தபோது இருந்த நிலையை விட தற்போது நிலைமை நிறைய மாறி விட்டது. இந்தியா உண்மையில் வளர்ந்து வருகிறது என பேசும்போது குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவுக்கு கிடைத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு திறமை தேவை. திறன் படைத்த பணியாளர்கள் தேவையாக உள்ளனர். இந்தியாவில், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென்பொருள் விரைவான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் திறமையான பல நிறுவனங்கள் உள்ளன.

இந்தியா, அதிக திறமையை கொண்டுள்ளது. அந்த நிறுவனங்கள் வழியே பலனடைய நாங்கள் விரும்புகிறோம். அந்த திறமையாளர்களை ஜெர்மனியில் பணியமர்த்தவும், ஈர்க்கவும் நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வர நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். அது ஒரு மிக முக்கிய விசயம். அதில், தனிப்பட்ட முறையில் நானே ஈடுபடுவேன் என அவர் கூறினார்.

இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜெர்மன் தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், சுவை மிகுந்த ஒரு கப் தேநீரை குடிக்காமல் இந்தியாவை நீங்கள் எப்படி அனுபவிக்க முடியும்?

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சை டெல்லியின் சாணக்யாபுரி பகுதியின் சாலையோரத்தில் உள்ள எங்களது விருப்பத்திற்குரிய தேநீர் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றோம்.

நீங்களும் செல்ல வேண்டும். இந்தியாவின் உண்மையான சுவை கிடைக்கும் என தெரிவித்து உள்ளது. அந்த கடையில், அதிபர் ஸ்கால்ஸ் ஒரு தேநீர் வாங்கி அருந்திய காட்சிகளும், உடன் ஜெர்மனி தூதர் நிற்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது.

இதன்பின்னர் தேநீர் கடைக்காரர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் குழு புகைப்படம் ஒன்றும் எடுத்து கொண்டார்.


மேலும் செய்திகள்