< Back
தேசிய செய்திகள்
ஜி20 நாடுகள் சபை உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது; வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு
தேசிய செய்திகள்

ஜி20 நாடுகள் சபை உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது; வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
13 Dec 2022 12:15 AM IST

ஜி20 நாடுகளின் சபை உயர்மட்ட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதில் கலந்துகொள்ள வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெங்களூரு:

இந்தியாவுக்கு தலைமை பதவி

ஜி20 நாடுகள் சபையில் இந்தியா அங்கம் வகிக்கிறது. அதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு இடம் பெற்றுள்ளன.

இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நாடும், சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு அந்த சபைக்கு தலைமை பதவியை வகிக்கும். கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி இந்தோனேஷியாவில் நடைபெற்ற அந்த நாடுகளின் உச்சி மாநாட்டில், ஜி20 நாடுகள் சபை தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த தலைமை பதவியை இந்தியா கடந்த 1-ந் தேதி முறைப்படி அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

200 கூட்டங்கள் நடத்த திட்டம்

அந்த நாளில் இருந்து அடுத்த ஒரு ஆண்டுக்கு தலைமை பதவியை இந்தியா நிர்வகிக்கும். இந்த ஜி20 நாடுகள் உலகின் மொத்த பொருளாதாரத்தில் 80 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்த நாடுகளில் மக்கள்தொகை, உலகின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் உள்ளது.

இந்த ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக இந்த நாடுகளின் பல்வேறு மட்டத்திலான அதிகாரிகள் கலந்து கொள்ளும் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன.

உற்சாக வரவேற்பு

இந்த 200 கூட்டங்களில் 14 கூட்டங்கள் கர்நாடகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் முறையாக ஜி20 நாடுகள் சபையின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று காலையில் விமானம் மூலம் கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடக அரசின் வரவேற்பு குழுவின் தலைவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம்பிரசாத் மனோகர் மற்றும் அதிகாரிகள் அந்த பிரதிநிதிகளுக்கு மைசூரு தலைப்பாகை, சந்தன மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

கலை நிகழ்ச்சிகள்

மேலும் கர்நாடகத்தின் பல்துறை நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு கர்நாடகத்தின் கலாசாரம் வெளிப்படுத்தப்பட்டது. இன்று தொடங்கும் இந்த உயர்மட்ட கூட்டம் 15-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் கூட்டம் நடைபெறும் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் நிதி, பொருளாதார விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்