'ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாக்கப்படுகிறது' - அமித்ஷா
|ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாக்கப்படுகிறது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
காந்திநகர்,
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டு நடந்த மாபெரும் சிப்பாய்க் கழகத்தின்போது, குஜராத்தின் மான்சா பகுதியைச் சேர்ந்த 12 சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக குஜராத் மாநிலம் காந்திநகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் அமித்ஷா திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியின்போது அமித்ஷா பேசியதாவது;-
"எனது ஆளுமையை கட்டியெழுப்புவதில் புத்தகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. ஒரு நாட்டின் எதிர்காலம் நூலகத்தில் உருவாக்கப்படுகிறது. அது நமது மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.
இன்றைய இளைஞர்களும், குழந்தைகளும் நமது மொழியை விட்டு விலகிச் செல்கின்றனர். பிரதமர் மோடி குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது புத்தக வாசிப்பிற்கான ஒரு இயக்கத்தை தொடங்கினார். தற்போது நமது நாடு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, சந்திரயான்-3 என புதிய உயரங்களை அடைந்து கொண்டிருக்கிறது."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.