< Back
தேசிய செய்திகள்
தனிக்கட்சி தொடங்கினாலும் ஜனார்த்தன ரெட்டியுடனான நட்பு தொடரும்; மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி
தேசிய செய்திகள்

தனிக்கட்சி தொடங்கினாலும் ஜனார்த்தன ரெட்டியுடனான நட்பு தொடரும்; மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி

தினத்தந்தி
|
26 Dec 2022 4:52 AM IST

ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கி இருப்பதால் பா.ஜனதாவுக்கு பிரச்சினை இல்லை என்றும், அவருடனான நட்பு தொடரும் என்றும் மந்திரி ஸ்ரீராமுலுதெரிவித்துள்ளார்.

பல்லாரி:

பல்லாரியில் நேற்று போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தலைவர்களுடன் ஆலோசிப்பேன்

எனது உயிர் நண்பரான ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். ஜனார்த்தன ரெட்டி எந்த முடிவை எடுத்தாலும் பல முறை யோசித்து தான் எடுப்பார். அவர் மிகுந்த அறிவு கொண்டவர், மிகப்பெரிய அனுபவசாலி. இப்படிப்பட்ட உயிர் நண்பர் எனக்கும், பா.ஜனதா கட்சிக்கும் பக்க பலமாகவும் இருந்தார். பா.ஜனதாவை அவர் எப்போதும் விட்டு கொடுத்து பேசியதில்லை. பா.ஜனதாவும் அவரை எப்போதும் விட்டு கொடுத்ததில்லை.

தற்போது ஜனார்த்தன ரெட்டி தனது சொந்த காரணங்களுக்காக புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். நான், அவரது உயிர் நண்பராகவும், ஒரு பாறை போலவும் இருக்கிறேன். தற்போது நான் பா.ஜனதா கட்சியில் இருப்பதுடன், மந்திரியாகவும் இருந்து வருகிறேன். இந்த விவகாரம் பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளேன்.

நட்பு தொடரும்

ஒருவரின் கொள்கைகள் வேறு விதமாக இருக்கும் பட்சத்தில், அதனை மாற்றுவதற்கு சாத்தியமில்லை. ஜனார்த்தன ரெட்டி தொடங்கி இருக்கும் புதிய கட்சியால் நல்லதா?, கெட்டதா? என்பது குறித்து ஆராயவோ, அதுபற்றி விவாதிக்கவோ விரும்பவில்லை. ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கி இருப்பதால், பா.ஜனதாவினர் யாரும் செல்லவில்லை. நமது கட்சி தொண்டர்கள், நம்முடன் தான் இருக்கிறார்கள். பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. கட்சிக்கு என்று தனிக் கொள்கை, கோட்பாடுகள் உள்ளது.

எனவே ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சியால் பா.ஜனதாவுக்கு பிரச்சினை இல்லை. அரசியல் வேறு, நட்பு வேறு. ஜனார்த்தன ரெட்டியுடனான நட்பு கால, காலத்திற்கும் தொடரும். எங்கள் நட்பில் எந்த பிரச்சினையும் இல்லை. ஜனார்த்தன ரெட்டிக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் பல முறை இருந்துள்ளனர். இனியும் அவரது மனதை மாற்ற முயற்சித்து, பேச்சு வார்த்தை நடத்துவதால் எந்த பயனும் இல்லை. ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சியின் நிலை என்ன? என்பது காலம் வரும் போது தெரியவரும்.

இவ்வாறு மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.

மேலும் செய்திகள்