கொள்ளேகால் சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை
|சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கும்கி யானைகளை வரவழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
கொள்ளேகால்:-
சிறுவனை தாக்கிய சிறுத்தை
சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா குண்டூர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. குண்டூர் மட்டுமின்றி மல்லிகேஹள்ளி, கெஸ்தூர், தகருபூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகள், நாய்களை அடித்து கொன்று வருகிறது. மல்லிகேஹள்ளி கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தார்.
இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் குண்டூர் கிராமத்தில் 2 இடங்களில் வனத்துறையினர் கூண்டுகள் வைத்துள்ளனர். ஆனால் அந்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை.
வனத்துறையினர் தீவிரம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் குண்டூர் கிராமத்தில் உள்ள பாறையில் சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. இதனை பார்த்து அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் அந்த பாறை பகுதிக்கு சென்று சிறுத்தையை தேடினர். ஆனால் அந்த சிறுத்தை கிடைக்கவில்லை. சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தைைய பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அந்த சிறுத்தை வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
இந்த நிலையில் வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடிக்க கும்கி யானையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே சிறுத்தை பிடிபடும் வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.