பெங்களூருவில் சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் வருகிற 4-ந் தேதி மலர் கண்காட்சி தொடக்கம்
|பெங்களூருவில், சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் வருகிற 4-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. கண்ணாடி மாளிகையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கெங்கல் அனுமந்தய்யா சிலை, விதானசவுதா இடம் பெற உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு லால்பாக்கில் ஆண்டு தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சியின் போது லால்பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகைக்குள் பல லட்சம் பூககளால் சுதந்திர தினத்திற்காக போராடியவர்கள், சுதந்திர தினம் சம்பந்தப்பட்டவை பூக்களால் அலங்கரிக்கப்படும்.
அதன்படி, அடுத்த மாதம் (ஆகஸடு) 15-ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு லால்பாக்கில் வருகிற 4-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சி 15-ந் தேதி சுதந்திர தினம் வரை நடைபெற உள்ளது. கண்காட்சியையொட்டி கண்ணாடி மாளிகையில் இடம் பெறும் நபர், கட்டிடங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனையில் சுதந்திரத்திற்காக போராடிய கெங்கல் அனுமந்தய்யாவின் சிலையையும், அவர் கட்டிய விதானசவுதா கட்டிடத்தையும் பூக்களால் அலங்கரித்து பொதுமக்கள் பார்த்து ரசிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விதானசவுதாவை பூக்களால் அலங்கரிப்பதற்காக 10 முதல் 12 லட்சம் பூக்களை பயன்படுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 4-ந் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சி 214-வது மலர் கண்காட்சி ஆகும்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஜெகதீஸ் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 4-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. கெங்கல் அனுமந்தய்யா கவுரவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்காக தோட்ட கலைத்துறை ரூ.2½ கோடியை ஒதுக்கி உள்ளது. மலர் கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தோட்ட கலைத்துறை செய்து வருகிறது, என்றார்.