< Back
தேசிய செய்திகள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது - பிரதமர் மோடி உரை
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது - பிரதமர் மோடி உரை

தினத்தந்தி
|
31 July 2022 12:23 PM IST

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வேயின் வரலாற்றுப் பங்கு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம்.

காமல்வெல்த் போட்டியில் டீம் இந்தியா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. கொரோனா காலத்துக்கு மத்தியில் மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல ஆரம்பம்.

இந்த மாதம் மெய்நிகர் ஹெர்பேரியம் துவக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் அல்லது தாவர பாகங்களின் தரவுத்தளம் இதில் உள்ளது, இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் மற்றும் தொடர்புடைய அறிவியல் தகவல்களும் இதில் கிடைக்கின்றன. இந்த மெய்நிகர் ஹெர்பேரியம் நமது தாவரவியல் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்