வேலியே பயிரை மேய்ந்த அவலம்... புகார் அளிக்க வந்த பெண்ணை 3 நாட்களாக அடைத்து வைத்து பலாத்காரம்
|அரியானாவில் கணவருக்கு எதிராக புகார் அளிக்க வந்த பெண்ணை சப்-இன்ஸ்பெக்டரின் கூட்டாளிகள் 3 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பல்வால்,
அரியானாவில் பல்வால் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் அவருடைய கணவருக்கு எதிராக புகார் அளிப்பதற்காக ஹசன்பூர் காவல் நிலையத்திற்கு கடந்த ஜூலை 23-ந்தேதி சென்றுள்ளார்.
அவர் காவல் துணை ஆய்வாளர் சிவசரணை சந்தித்துள்ளார். ஆனால், பெண்ணின் புகாரை ஏற்க சிவசரண் மறுத்து விட்டார். அவர், பல்லி என்ற கூட்டாளியை அழைத்து அவருடன் செல்லும்படி பெண்ணை வற்புறுத்தி உள்ளார்.
அருகே இருந்த வயல்வெளியில் நிரஞ்சன் மற்றும் பீமா இருவரும் இவர்களுக்காக காத்திருந்து உள்ளனர். 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோவையும் எடுத்துள்ளனர்.
இதன்பின், வீடியோவை ஆன்லைனில் பரப்பி விடுவோம் என மிரட்டி, அந்த பெண்ணை பல்வாலில் உள்ள சாந்தி என்ற பெண்ணின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இரவு முழுவதும் அவரை அடைத்து வைத்து 3 பேரும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்களாக இந்த கொடுமை நடந்துள்ளது.
தொடர்ந்து, பிஜேந்திரா என்பவரிடம் அந்த பெண்ணை விற்றுள்ளனர். அவர், தனது மைத்துனன் கஜேந்திராவுடன் சேர்ந்து கொண்டு, காவல் துணை ஆய்வாளர் சிவசரண் முன்னிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவர்களில் ஒருவரின் போனை எப்படியோ கைப்பற்றிய அந்த பெண், போலீசை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்பின்னரே, போலீசார் அந்த பெண்ணை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.