தோட்டத்திற்குள் புகுந்த மாடுகளை துப்பாக்கியால் சுட்ட விவசாயி; 4 மாடுகள் செத்தன
|தோட்டத்திற்குள் புகுந்த மாடுகளை விவசாயி துப்பாக்கியால் சுட்டார். இதில், 4 மாடுகள் செத்தன.
உடுப்பி:
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள பெல்லாலாவை அடுத்த அங்காடிஜட்டு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மா (வயது 60). விவசாயி. இவருக்கு அப்பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த நிலையில் அவரது தோட்டத்திற்குள் கிராமத்தை சேர்ந்த சிலர் வளர்த்து வரும் மாடுகள் புகுந்து விளைபயிர்களை தின்று நாசப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் மாட்டின் உரிமையாளர்களிடம் கூறி, மாடுகளை கட்டிப்போட்டு வளர்க்கும்படி கூறி வந்துள்ளார். இருப்பினும் தினமும் மாடுகள் அவரது தோட்டத்திற்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளன. இதனால் நரசிம்மா கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினமும் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் அவரது தோட்டத்திற்குள் புகுந்து விளைபயிர்களை தின்று கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த நரசிம்மா, தோட்டத்திற்குள் புகுந்த மாடுகளை பார்த்து கோபமடைந்து, தனது நாட்டுத்துப்பாக்கியால் மாடுகளை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 4 மாடுகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து செத்தன. மேலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 6 மாடுகள் பலத்த காயமடைந்தன. செத்துப்போன 4 மாடுகளும் அதே பகுதியை சேர்ந்த ரோஸ் என்ற பெண்ணுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.