வீடு புகுந்து விவசாயி அடித்து கொலை
|சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட வீடு புகுந்து விவசாயியை அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சீனிவாசப்பூர்
தகராறு
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா கவுனிபள்ளி கிராமத்தை சோ்ந்தவர் வெங்கடராயப்பா (வயது 55). விவசாயி. இதேப்பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பா. தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் உள்ள சாந்தா மைதானத்தில் வெங்கடராயப்பாவும், சங்கரப்பாவும் நின்று கொண்டிருந்தனர். அப்போது வெங்கடராயப்பா, மைதானத்தில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சங்கரப்பா, அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
கொலை
இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் பிரித்து சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாலையில் தனது நண்பர்களுடன் ெவங்கடராயப்பாவின் வீட்டுக்கு சங்கரப்பா வந்தார்.
அப்போது அவர்கள் வீடு புகுந்து வெங்கடராயப்பாவை சரமாரியாக தாக்கினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த வெங்கடராயப்பாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வெங்கடராயப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து சீனிவாசப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான வெங்கடராயப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மைதானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வெங்கடராயப்பாவை சங்கரப்பா தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக சீனிவாசப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரப்பாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.