சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரத்தை விசாரித்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் ''தவறு நடந்ததா என்று எந்த முடிவுக்கும் வர முடியவில்லை''
|'செபி' அமைப்பின் சந்தேகத்துக்கான அடிப்படை என்னவென்றால், 13 வெளிநாட்டு முதலீ்ட்டு நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பதுதான்.
புதுடெல்லி,
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பிரச்சினையில் 'செபி' கடமை தவறியதா என்பது குறித்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் அதானி குழுமம் மோசடி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24-ந் தேதி அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, அதானி குழும பங்குகள் விலை மளமளவென சரிந்தது.
இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தபோதிலும், எதிர்க்கட்சிகள் அதானி குழுமம் மீதும், மத்திய அரசு மீதும் தாக்குதல் தொடுத்தன.
சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' 2 மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. (இந்த கால அவகாசம், ஆகஸ்டு 24-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது).
மேலும், குற்றச்சாட்டை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 நிபுணர்களை கொண்ட குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.
இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.சாப்ரே குழு நேற்று தனது 178 பக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான ஜனவரி 24-ந் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தையில் தேவையற்ற ஏற்ற இறக்கம் எதுவும் இல்லை. அதானி குழும பங்குகளின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்தது. அதற்கு அந்த அறிக்கையே காரணம்.
'செபி' அமைப்பின் சந்தேகத்துக்கான அடிப்படை என்னவென்றால், 13 வெளிநாட்டு முதலீ்ட்டு நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பதுதான்.
அவற்றின் பங்குதாரர்கள், உண்மையான பங்குதாரர்கள் அல்ல என்றும், அவர்கள் அதானி குழும உரிமையாளர்களின் போலி ஆட்கள் என்றும் கருதியது. ஆனால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பயன்படுத்தியும், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்று கண்டறிய முடியவில்லை. அதன் விசாரணை வெறுமை ஆகிவிட்டது.
இந்த பின்னணியில், 'செபி' அளித்த ஆதாரங்கள், அனுபவரீதியான புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், பங்கு விலையை செயற்கையாக மாற்றி அமைக்கப்பட்டது தொடர்பாக, 'செபி' கடமை தவறியதா என்பது குறித்து எங்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
'செபி' தரப்பில் கடமை தவறவில்லை என்றே கருதுகிறோம். இப்பிரச்சினையில், 'செபி' உறுதியான, கொள்கையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு நிபுணர் குழு அறிக்கை, ஏற்கனவே கணித்ததுதான். இந்த குழுவின் விசாரணை வரம்பு குறைவானது என்றும், இக்குழுவால் முறைகேட்டை கண்டுபிடிக்க முடியாது என்றும் நாங்கள் கூறி வந்தோம்.
வெளிநாட்டு முதலீட்டு பிரிவில் வந்த கணக்கில் காட்டப்படாத ரூ.20 ஆயிரம் கோடி யாருடைய பணம் என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகிறோம். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் வேண்டும் என்ற கோரிக்கைக்கு இது வலு சேர்க்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.