< Back
தேசிய செய்திகள்
பாடல் பாடிய முன்னாள் ராணுவ வீரர்... சில நொடிகளில் பிரிந்த உயிர்.. வைரலாகும் வீடியோ
தேசிய செய்திகள்

பாடல் பாடிய முன்னாள் ராணுவ வீரர்... சில நொடிகளில் பிரிந்த உயிர்.. வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
31 May 2024 9:59 PM IST

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் பல்வீர் சிங் சப்ரா. முன்னாள் ராணுவ வீரரான இவர் இந்தூரில் உள்ள பூட்டி கோட்டி என்ற பகுதியில் பல்வீர் சிங் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ளார். பயிற்சிக்கு இடையில், பல்வீர் சிங் ராணுவ உடையில் தனது கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தேச பக்தி பாடல்களுக்கு பாடியபடி நடனம் ஆடினார்.

நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே தள்ளாடிய அவர், சில நொடிகளில் மேடையிலேயே கீழே விழுந்தார். முதலில், அவர் நடனத்தின் அங்கமாக கீழே விழுந்திருப்பார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர். கீழே விழுந்த பல்வீர் சிங் சில நிமிடங்கள் ஆகியும் எழாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது குழுவினர் அவரை எழுப்ப முற்பட்டனர். அப்போது அவர் சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பல்வீர் சிங்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் பல்வீர் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்