மணிப்பூர் விவகாரம் : பிரதமர் மோடி அறிக்கை அளிக்கும் வரை போராட்டம் தொடரும்; எதிர்க்கட்சிகள் முடிவு
|மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று 4-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது.
இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி ஏற்பட முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ள மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இந்த சூழலில், பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று, நாடாளுமன்றத்தின் மேலவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான அறையில் ஒத்த கருத்துடைய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டமும் இன்று காலை நடந்தது.
இந்த கூட்டத்தில் காலை 10.40 மணியளவில் சுமுக முடிவு எட்டப்பட்டது. இதில், மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டத்தை தொடருவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.