பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கொலையில் குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
|பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பியாந்த் சிங் கொலை வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுடெல்லி
பஞ்சாப் மாநிலத்தில் 1992-1995 கால கட்டத்தில், காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரி பதவி வகித்தவர் பியாந்த் சிங். இவர் 1995-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி சண்டிகாரில் அரசு தலைமைச் செயலகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் அவருடன் மேலும் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் பின்னணியில் இருந்தது அம்பலமானது.
இதுதொடர்பான வழக்கில் கைதான பல்வந்த் சிங் ராஜோனாவுக்கு மரண தண்டனை விதித்து சண்டிகார் தனிக்கோர்ட்டு 2007-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பு மேல் கோர்ட்டுகளில் உறுதி செய்யப்பட்டது.
இவர் 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இவர் தாக்கல் செய்த கருணை மனு, 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தான் நீண்ட காலம் சிறையில் இருப்பதை காரணம் காட்டி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
இவரது கருணை மனுவின் மீது எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டிருப்பதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ராஜோனா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியும், மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜூம் ஆஜராகி வாதாடினர். விசாரணை முடிந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் ராஜோனாவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர்.
மேலும், "ராஜோனாவின் கருணை மனு மீது உரிய அதிகார அமைப்பு முடிவு செய்ய வேண்டும்" எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.