தாயை பிரிந்த குட்டி யானை உயிரிழப்பு.. சோகத்தில் முடிந்த பாசப்போராட்டம்
|தாயை இழந்து பரிதவித்த குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் 25 நாட்களாக போராடி வந்தனர்.
குடகு,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா அவரேகுந்தா பசவனஹள்ளி கிராமத்தில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து காட்டு யானை கூட்டம் வெளியேறியது. அந்த கூட்டத்துடன் 5 மாத குட்டி யானை ஒன்றும் வந்தது. கிராமத்தையொட்டி உள்ள காபி தோட்டத்தில் புகுந்த அந்த யானை கூட்டம் பின்னா் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
அந்த சமயத்தில் குட்டி யானை தாயை பிரிந்து வேறு வழியில் சென்றுவிட்டது. பின்னர் தாயை காணாமல் காபி ேதாட்டத்தில் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் அந்த குட்டி யானையை மீட்டு காபி தோட்டத்திலேயே பராமரித்து வந்தனர். மேலும் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் குட்டி யானையின் தாயை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அந்த குட்டி யானை துபாரே யானைகள் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு வைத்து குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வந்தனர். மேலும் குட்டி யானைக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அந்த குட்டி யானை தாயை காணாததால் சரியாக சாப்பிடாமல் இருந்து வந்தது. இதனால் அந்த யானை மிகவும் சோா்வாக காணப்பட்டது.
அந்த குட்டி யானைக்கு கஞ்சி, பால் உணவாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் தாயை பிரிந்த ஏக்கத்தில் குட்டி யானையின் உடல் நிலை திடீரென்று மோசமானது. இதனால் கால்நடை மருத்துவ குழுவினர் குட்டி யானைக்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். குளுக்கோசும் செலுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தது. இதையடுத்து குட்டி யானையின் உடல் வனப்பகுதியில் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. தாயை இழந்து பரிதவித்த குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் 25 நாட்களாக போராடி வந்தனர். ஆனால் அந்த பாசப்போராட்டம் சோகத்தில் முடிந்தது. தாயை பிரிந்த ஏக்கத்தில் 5 மாத குட்டி யானை செத்ததாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.