< Back
தேசிய செய்திகள்
பிரதமர் அனைத்து மாநிலங்களையும் ஆட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை; எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்
தேசிய செய்திகள்

பிரதமர் அனைத்து மாநிலங்களையும் ஆட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை; எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்

தினத்தந்தி
|
21 Jun 2023 2:01 PM IST

கவர்னர்களை கொண்டு அனைத்து மாநிலங்களையும் பிரதமர் ஆட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை என எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நீர்த்து போக செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதே போல் வருங்காலத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்களையும் மத்திய அரசு பறிக்கும் என அவர் கூறினார். அவசர சட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கடந்த மே 23-ந்தேதியில் இருந்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவசர சட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறார்.

கடந்த மே 23-ந்தேதி மேற்கு வங்காளம் சென்று, அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மன் மற்றும் ஆம் ஆத்மியின் பிற தலைவர்களும் சென்றிருந்தனர்.

தொடர்ந்து, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனை அடுத்து, உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவை லக்னோ நகரில், கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்நிலையில், பீகாரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதில், நாடாளுமன்றத்தில் இந்த அவசர சட்டம் எப்படி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது பற்றி முதலில் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் எதிர்க்கட்சிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த அவசர சட்டம் ஒரு பரிசோதனை. இதில் வெற்றி பெற்று விட்டால், இதேபோன்ற அவசர சட்டங்களை கொண்டு வந்து, பா.ஜ.க. அல்லாத மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு எடுத்து கொள்ளும்.

அதன்பின் அனைத்து மாநில அரசுகளையும், 33 கவர்னர்கள் அல்லது துணை நிலை கவர்னர்கள் வழியே பிரதமர் ஆட்சி ஆட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை என எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்