< Back
தேசிய செய்திகள்
திருமணத்திற்கு மறுநாள் கணவரை விட்டு மணமகள் ஓட்டம்... விசாரணையில் திடுக் தகவல்
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு மறுநாள் கணவரை விட்டு மணமகள் ஓட்டம்... விசாரணையில் திடுக் தகவல்

தினத்தந்தி
|
31 March 2024 2:12 PM IST

திருமணம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட இந்த கும்பலிடம் பல குடும்பங்கள் பணம் கொடுத்து இழந்துள்ளன என விசாரணையில் தெரிய வந்தது.

நாக்பூர்,

மராட்டியத்தின் நாக்பூர் மாவட்டத்தில் வாகேஷ்வர் கிராமத்தில் வசித்து வருபவர் மனோகர் மேஷ்ராம் (வயது 67). இவருடய மகன் பிரவீன். மகனுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டு பெண் தேடியுள்ளார்.

இதன்படி, சோனு என்பவரை மகனுக்கு பேசி முடித்துள்ளார். இதற்காக சீமா என்பவருக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதன்பின்னர், பிரவீனுக்கும், சோனுவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் சோனுவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் மணமகன் வீட்டாரால் சோனுவை கண்டறிய முடியவில்லை.

இதனால், பயந்து போன மேஷ்ராம், தொலைபேசி வழியே சீமாவை தொடர்பு கொண்டார். ஆனால், பலமுறை முயற்சித்தும் அவர் பதிலளிக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த மேஷ்ராம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இதன்பின்பே, சோனு, சீமா உடன் வேறு சிலரும் சேர்ந்து இவர்களிடம் திருமணம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால், மேஷ்ராம் மற்றும் கணவர் பிரவீன் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்று, பல குடும்பங்கள் இவர்களிடம் பணம் கொடுத்து இழந்துள்ளன என தெரிய வந்தது.

இதன்பின்னர் போலீசார் புதிய திட்டத்தின்படி, சீமாவை அணுகினர். எங்களிடம் ஒரு குடும்பத்தினர் உள்ளனர். அவர்களுக்கு நல்ல மணமகள் தேவை என கூறி, சீமா உள்ளிட்ட கும்பலை பொறி வைத்து கைது செய்தனர்.

இதில், சதீஷ் தீபக் ஹிரேகான் (வயது 27), அமித் தேகம், சீமா (வயது 35), சோனு (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சோனுவுக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திட்டமிட்டு, இதுபோன்று பலரை மோசடி செய்து பணம் பறித்து வந்துள்ளனர்.

இதன்படி, மணமகனை திருமணம் செய்ததும், ரூ.50 ஆயிரம் பணம் பெற்று கொள்வார்கள். அடுத்த நாள் மணமகன் வீட்டில் இருந்து சோனு தப்பி வந்து விடுவார். இந்த முறை அந்த கும்பல் போலீசில் சிக்கி கொண்டது. சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்