மைசூருவில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது
|மைசூருவில், கன்றுகுட்டியை கடித்து கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது.
மைசூரு:
கன்றுக்குட்டியை கடித்து கொன்றது
மைசூரு நகர் அக்ரஹாரா ராமானுஜர் ரோடு பகுதியில் வெற்றிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கால்வாயில் முதலை ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் மேய்ந்த கன்றுகுட்டியை, முதலை கடித்து கொன்று இரையாக்கியது. மேலும் அடிக்கடி முதலை, கால்வாயில் வெளியே வந்து தலையை காட்டி உள்ளே சென்றுள்ளது. இதைப்பார்த்து தோட்டத்தில் வேலை செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் முதலை பீதியில் வேலைக்கு வர தயங்கினர். முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி வனத்துறையினர் விரைந்து வந்து முதலையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் வனத்துறையினர் கண்ணில் முதலை தென்படவில்லை.
முதலை பிடிபட்டது
இந்த நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையை பிடிக்க அப்பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கால்வாயில் பதுங்கி இருந்த முதலையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்கள், சாக்கு பையை போட்டு நீண்ட நேரம் போராடி முதலை பிடித்து கயிற்றால் கட்டி வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அவர்களிடம் முதலையை ஒப்படைத்தனர். அதன்பேரில் வனத்துறையனிர் முதலையை பிடித்து கொண்டு சென்றனர். முதலை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள், தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.