மலாலி மசூதி விவகாரத்தில் கோர்ட்டு முடிவு எடுக்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
|மலாலி மசூதி விவகாரத்தில் கோர்ட்டு முடிவு எடுக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மங்களூரு:
பசவராஜ் பொம்மை வருகை
தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு, வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக நேற்று இரவு பசவராஜ் பொம்மை விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார்.
மங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை, கலெக்டர் ராஜேந்திரா, மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோர்ட்டு முடிவு எடுக்கும்
பள்ளி பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசிடம் விளக்கம் கேட்டுள்ளேன். அவர் அதுதொடர்பான அறிக்கையை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை வந்த பிறகு கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அதன் பிறகு மீதமுள்ள பாடப்புத்தகங்களை வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மலாலி மசூதி இருந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மங்களூரு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அதனால் அந்த விவகாரத்தில் கோர்ட்டு தான் முடிவு எடுக்கும். ஆகையால் அதை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் எங்களுக்கு சில நண்பர்கள் உள்ளனர். அதனால் அவர்களது ஆதரவில் மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா 3-வது வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.