ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து உள்ளனர் - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரி தாக்கு
|தேசவிரோத சக்திகளுடன் கூட்டங்களை நடத்துவதாகவும், குடும்ப அரசியல் செய்கிறார்கள் எனவும், ஊழல்வாதிகள் என்றும் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஷதோல்,
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இதற்காக கடந்த மாதம் பாட்னாவில் சந்தித்து ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சித்தலைவர்கள், அடுத்ததாக பெங்களூருவில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் சந்திக்க உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து உள்ளார். எந்த தலைவரையும் பெயர் குறிப்பிட்டு சொல்லாமல் கடுமையாக சாடினார்.
மத்திய பிரதேசத்தின் ஷதோல் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜாமீனில் வெளியே உள்ளனர்
இந்த எதிர்ப்பாளர்கள் (எதிர்க்கட்சித் தலைவர்கள்) தேச விரோத சக்திகளுடன் கூட்டங்களை நடத்துகிறார்கள். உண்மையில், ஊழல்வாதிகள் ஒற்றுமையின் துரோகக் காட்சியை உருவாக்குகிறார்கள். இந்த தனிநபர்கள் ஒவ்வொருவரும் ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
குடும்பத்தை மையமாகக் கொண்ட இந்த கட்சிகள் ஒருவரையொருவர் வீசி எறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவர்களின் சூழ்ச்சியில் நீங்கள் விழுந்தால், பாதிக்கப்படுவீர்கள். உங்கள் அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும்.
இவர்கள் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில் ஆதிவாசி குழந்தைகள் தங்கள் தாய் மொழியில் அறிவொளி பெறுவதை இவர்கள் விரும்பவில்லை. பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் முன்னேறினால், தங்கள் வாக்கு வங்கிக்கு பலத்த அடி விழும் என்பது அவர்களுக்கு தெரியும்.
பழங்குடியினர் புறக்கணிப்பு
முன்ெபல்லாம் பழங்குடியினர் புறக்கணிக்கப்பட்டனர், அதே சமயம் காடுகளையும் நிலங்களையும் கொள்ளையடிப்பவர்கள் பாதுகாப்பைப் பெற்றனர். பழங்குடியினரின் பாரம்பரியமும், கலையும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டன. ஆதிவாசிகளை அவமதித்து வந்த முந்தைய காலகட்டங்களின் பாதகமான நடத்தையை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
ஒரு பழங்குடியினப் பெண் தேசத்தின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை ஏற்கும்போது, பல கட்சிகளின் எதிர்மறையான அணுகுமுறையை நாங்கள் கவனித்தோம்.
பா.ஜனதாவைப் பொறுத்தவரை, பழங்குடியின சமூகம் என்பது வெறும் அரசின் புள்ளி விவரம் அல்ல, உணர்வுப்பூர்வமான விஷயமாகும்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை கூட அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சையை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
எனவே பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கவர்னர் மங்குபாய் படேல், மத்திய மந்திரிகள் மன்சுக் மாண்டவியா, பக்கன்சிங் குலாஸ்தே, ரேணுகா சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.