பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருப்பதை காங்கிரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை; மந்திரி சுதாகர் குற்றச்சாட்டு
|லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருப்பதை காங்கிரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று மந்திரி சுதாகர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
சகித்து கொள்ள முடியவில்லை
காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு முறையும் லிங்காயத் சமுதாயத்தை குறியாக வைத்து கொண்டு, அவப்பிரசாரம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் தலைவா்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஒரு முதல்-மந்திரிக்கு எதிராக போஸ்டர் ஒட்டி, கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே செய்ய முடியும்.
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருப்பதை காங்கிரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக போஸ்டர் பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி இதுபோன்று நடந்து கொள்வது புதிது இல்லை.
லிங்காயத் முதல்-மந்திரிகளுக்கு எதிராக...
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை போன்று, இதற்கு முன்பு லிங்காயத் சமுதாயத்தில் முதல்-மந்திரியாக இருந்த வீரேந்திர பட்டீல், கெங்கல் அனுமந்தய்யாவுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் அவப்பிரசாரம் செய்திருந்தார்கள். இதுபோன்று தொடர்ந்து காங்கிரசார் நடந்து கொண்டால், மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். மக்கள் அறிவு உள்ளவர்கள். சரியான சந்தர்ப்பத்தில் காங்கிரசாருக்கு பாடம் புகட்ட தவற மாட்டார்கள்.
தங்களது சொந்த அரசியல் லாபத்திற்காக இதுபோன்று, முதல்-மந்திரிக்கு எதிராக பே-சி.எம். விவகாரத்தை பிரசாரம் செய்து வருகின்றனர். இது கர்நாடக மக்களுக்கு நன்கு தெரியும். 40 சதவீத கமிஷன் பெற சாத்தியமா?, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து இவ்வளவு கமிஷன் பெற முடியுமா?. காங்கிரஸ் கட்சியினர், பா.ஜனதாவுக்கு எதிராக என்ன செய்தாலும், அவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் காரணங்கள் இல்லை
முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா சந்தித்து பேசியது குறித்து மந்திரி சுதாகரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் பதிலளித்து கூறும் போது, கே.எச்.முனியப்பா, என்னை சந்தித்து பேசியதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. முதலில் இருந்தே எனக்கும், கே.எச்.முனியப்பாவுக்கும் இடையே நட்புறவு உள்ளது. இது ஒரு சாதாரண சந்திப்பு தான். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.