பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை..!
|பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து இருப்பதால், பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாஸ்மதி அல்லாத பிற வகைகளைச் சேர்ந்த வெள்ளை நிற அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த வகை அரிசியை பாதியளவில் குத்தியது, முழுவதுமாக குத்தியது, தீட்டப்பட்ட அரிசி என எந்த வடிவிலும் ஏற்றுமதி செய்யக் கூடாது. அதே நேரத்தில் ஏற்கெனவே, ஏற்றுமதிக்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுவிட்ட அரிசிக்கு இந்தத் தடை பொருந்தாது.
எனினும், மத்திய அரசு சில அசாதாரண சூழல்களில் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கும். முக்கியமாக பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடா்பான விஷயம் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கைகள் அடிப்படையில் அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.