அரபிக்கடலுக்குள் கார் பாய்ந்தது; வாலிபர் சாவு 2 பேர் மீட்பு-மற்றொருவர் கதி என்ன?
|மரவந்தே கடற்கரை சாலையில் சென்றபோது அரபிக்கடலுக்குள் கார் பாய்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அதில் 2 பேர் மீட்கப்பட்டனர். மற்றொருவரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
மங்களூரு;
அரபிக்கடலுக்குள் கார் பாய்ந்தது
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா மரவந்தே கடற்கரையோரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரை உடைத்து கொண்டு அரபிக்கடலுக்குள் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், கங்கொல்லி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வாலிபர் சாவு
அப்போது தீயணைப்பு படையினர் 2 பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று காலை ஒருவரை தீயணைப்பு படையினர் பிணமாக மீட்டனர். மற்றொருவரை காணவில்லை.
அவருடைய கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அவரும் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர் கோட்டேஷ்வர் அருகே பீஜாடியை சேர்ந்த விராஜ் ஆச்சார்யா (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் மீட்கப்பட்டவர்கள் சந்தேஷ், கார்த்திக் என்பதும், மாயமானவர் ரோஷன் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இவர்கள் 4 பேரும் கோட்டேஷ்வரில் இருந்து பைந்தூர் நோக்கி மரவந்தே கடற்கரை சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. மேலும் கடலுக்குள் மூழ்கிய காரையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். இதுகுறித்து கங்கொல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.