பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது; பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு
|கடபா அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மங்களூரு;
2 பேர் சாவு
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா குந்தியா-சுப்பிரமணியா மாநில நெடுஞ்சாலையில் பிலினேலே அருகே செரு பகுதியில் நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
பெங்களூருவை சேர்ந்தவர்கள்
இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தை உள்பட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடபா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் பெங்களூரு ராம்நகரை சேர்ந்த நாகேஷ் (வயது 32), தேஜூ என்கிற தேஜஸ்வினி (14) என்பதும், காயம் அடைந்தவர்கள் கார் டிரைவர் ரவி (30), ரஜனி (24), ரஞ்சித் (24), அச்சிந்தியா (6) மற்றும் பச்சிளம் குழந்தை என்பது தெரியவந்தது.
கோவிலுக்கு சென்று திரும்பியபோது...
இவர்கள் பெங்களூருவில் இருந்து குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பின்னர் அவா்கள் பெங்களூருவுக்கு திரும்பி சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து கடபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.