சரக்கு வாகனம் மீது மோதி கார் தீப்பிடித்து டிரைவர் உடல் கருகி சாவு
|குண்டலுபேட்டை அருகே சரக்கு வாகனம் மீது மோதி கார் தீப்பிடித்ததில் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார்.
கொள்ளேகால்-
குண்டலுபேட்டை அருகே சரக்கு வாகனம் மீது மோதி கார் தீப்பிடித்ததில் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார்.
கார்-சரக்கு வாகனம் மோதல்
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹிரிகாட்டி கேட் அருகே மைசூரு-ஊட்டி சாலையில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் எதிரே சரக்கு வாகனம் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சரக்கு வாகனம் மீது மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. மேலும் சரக்கு வாகனமும் தீப்பிடித்து எரிந்தது. சரக்கு வாகன டிரைவர் உடனடியாக கீழே இறங்கிவிட்டார். கார் டிரைவர் கீழே இறங்க முயன்றார்.
டிரைவர் உடல் கருகி சாவு
ஆனாலும் அதற்குள் தீ, கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு மளமளவென எரிந்தது. இதனால் டிரைவர் காருக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேகூர் போலீசாரும், குண்டலுபேட்டை தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் காரும், சரக்கு வாகனமும் எரிந்து நாசமாகின.
மேலும், காருக்குள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காருக்குள் உடல் கருகி உயிரிழந்தவர் மைசூருவை சேர்ந்த முசாமில் அகமது என்பதும், அவர் கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு பத்மினி, அங்கு சென்று பர்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த சம்பவம் குறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.