< Back
தேசிய செய்திகள்
தொழில் அதிபர்-குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் தாக்கி ரூ.18 லட்சம் நகை, பணம் கொள்ளை
தேசிய செய்திகள்

தொழில் அதிபர்-குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் தாக்கி ரூ.18 லட்சம் நகை, பணம் கொள்ளை

தினத்தந்தி
|
27 Sept 2023 2:12 AM IST

நாகமங்களா அருகே வீடு புகுந்து தொழில் அதிபர் மற்றும் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மண்டியா:

மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா பெல்லூர் ஹோப்ளி சாமலாபூர் கேட் பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத். இவர் தொழில் அதிபர் ஆவார். இவரது வீடு பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. அந்த வீட்டில் மஞ்சுநாத் தனது மனைவி, மகள், தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கடந்த 25-ந் தேதி அதிகாலையில் இவரது வீட்டுக்கு காரில் 4 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை தட்டினர். அதிகாலை வேளையில் அவர்கள் கதவை தட்டியதால் பதற்றம் அடைந்த மஞ்சுநாத் விழித்தெழுந்து கதவை திறக்க சென்றார்.

ஆனால் அதற்குள் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக வீட்டுக்குள் புகுந்தனர். இதனால் பதறிப்போன மஞ்சுநாத் கூச்சலிட்டார். மேலும் தனது செல்போனை எடுத்து உறவினர்கள் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பியை அழைக்க முயன்றார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் மஞ்சுநாத்தை தாக்கினர்.

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த மர்ம நபர்கள் ஒவ்வொரு அறையாக சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த மஞ்சுநாத்தின் மனைவி, மகள், அவரது தாய், தந்தை ஆகியோரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கினர்.

மேலும் துப்பாக்கி முனையில் அவர்களிடம் இருந்த நகைகள், வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டனர். மேலும் அவர்கள் மஞ்சுநாத்தின் செல்போன் உள்பட வீட்டில் உள்ள அனைவரது செல்போன்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தாங்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையே காலையில் மஞ்சுநாத்தின் தம்பி அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது தான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக அவர் பெல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மஞ்சுநாத், அவரது மனைவி, மகள், தாய், தந்தை ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகமங்களா தாலுகா பி.ஜி.நகரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுபற்றி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் காரில் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் பெல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மஞ்சுநாத்தின் வீட்டில் ரூ.18 லட்சம் மதிப்பிலன நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்