வரதட்சணை தரவில்லை என இளம்பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்த கொடூரம்: கணவர் மீது புகார்
|பெங்களூரு பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் (இளம்பெண்) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். எனது தந்தை ஐதராபாத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். எனக்கும், பெங்களூரு பசவனகுடியை சேர்ந்த சந்தீப் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்து இருந்தது. ஆடம்பரமாக நடந்த எங்கள் திருமணத்திற்கு எனது தந்தை ரூ.6 கோடி செலவு செய்து இருந்தார்.
மேலும் எனது கணவர் சந்தீப்புக்கு திருமணத்தின் போது 200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்கம், ரூ.55 லட்சம் மதிப்பிலான ஒரு கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தீப்பும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
வரதட்சணை கொடுக்க மறுப்பதால் குடித்துவிட்டு எனது தலையில் சந்தீப் சிறுநீர் கழித்து வருகிறார். அவர் எனக்கு மனதளவில் தொல்லை கொடுப்பதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் சந்தீப் மற்றும் அவரது பெற்றோர் மீது பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.