கடைசி நேரத்தில் மணமகனை மாற்றிய மணமகள்...!! திருமண விழாவில் பரபரப்பு
|குஷியின் குடும்பத்தினருக்கு வழங்கிய அனைத்து பரிசு பொருட்கள் மற்றும் பிற பொருட்களும் திரும்ப பெறப்பட்டு உள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜான்சி,
உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியின் திருமண திட்டத்தின் கீழ் பல ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவது வழக்கம்.
இதற்காக, மணமக்களுக்கு சீர்வரிசையாக பரிசு பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொடுக்கப்படும். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ஜான்சி நகரில் பெரிய அளவில் 132 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அப்போது, குஷி என்ற மணமகளுக்கு மத்திய பிரதேசத்தின் ரிஷ்பான் என்ற மணமனுடன் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. நிச்சயித்தபடி, திருமண நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் மணமகன் வந்து சேரவில்லை.
இதனால், அரசின் பலன்களை பெறுவதற்காக, உறவுக்கார இளைஞர் ஒருவரை குஷி திருமணம் செய்து கொண்டார். இந்த விவரம் தெரிய வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி மாவட்ட சமூக நல அதிகாரி லலிதா யாதவ் கூறும்போது, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ், ஜோடிகளின் ஆதார் அட்டைகள் சரியாக இருக்கின்றனவா? என்று சரிபார்க்கப்படும். பிற விசயங்களும் ஆய்வு செய்யப்படும். ஆனால், இந்த விசயத்தில் அது சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, குஷியின் குடும்பத்தினருக்கு வழங்கிய அனைத்து பரிசு பொருட்கள் மற்றும் பிற பொருட்களும் திரும்ப பெறப்பட்டு உள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதல்-மந்திரியின் திருமண திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு ரூ.51 ஆயிரம் வழங்கப்படும். அவற்றில், ரூ.35 ஆயிரம் நேரடியாக மணமகளின் வங்கி கணக்கிற்கு சென்று விடும். அந்த ஜோடிக்கு பரிசு பொருட்களாக கொடுப்பதற்காக ரூ.10 ஆயிரம் பணமும், திருமண நிகழ்ச்சி செலவுக்காக ரூ.6 ஆயிரம் பணமும் ஒதுக்கப்படும்.