10 நிமிடங்களில் ஆச்சரியம் அளிப்பேன் என கூறிய காதலன்... சுவிட்சர்லாந்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
|சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும்படி இளம்பெண்ணை காதலர் அழைத்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியின் மேற்கே திலக் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதன் சுற்றுச்சுவர் வெளியே இளம்பெண் ஒருவரின் உடல் நீண்டநேரம் கிடந்துள்ளது. இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் நேற்று முன்தினம் காலை அந்த உடலை கைப்பற்றினர். 30 வயதுடைய அந்த பெண் வெளிநாட்டை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது. உடலில் சித்ரவதை செய்த அடையாளங்கள் இருந்தன.
அந்த பெண்ணின் உடலில் தீயால் சுட்ட காயங்கள் காணப்பட்டன. இதனால், மனித கடத்தலுக்கான சாத்தியம் உள்ளது என போலீசார் சந்தேகித்தனர். அவருடைய கண்கள் பிதுங்கி காணப்பட்டன. இதனால், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என்றும் கூறப்பட்டது.
ஒற்றை ஆடையுடன், குட்டை கவுன் அணிந்தபடி உடல் இருந்தது. அவருடைய கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, பூட்டு போடப்பட்டு இருந்தன. உடலின் மேல்பகுதி ஒரு பெரிய, கருப்பு நிற பாலித்தீன் பையால் சுற்றப்பட்டு இருந்தது. அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடும் பணி நடந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் குர்பிரீத் என்ற நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அந்த இளம்பெண் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
சம்பவத்தன்று, அவருடைய கை, கால்களை கட்டி போட்டு பின்னர் கொலை செய்துள்ளார். பழைய கார் ஒன்றை வாங்கி, அந்த உடலை அதில் போட்டு வைத்திருக்கிறார். அழுகிய நாற்றம் வந்ததும், சாலையோரம் உடலை வீசி விட்டு, தப்பி விட்டார்.
குர்பிரீத்திடம் இருந்து ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என டெல்லி மேற்கு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
இதில், 4 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடக வலைதளம் ஒன்றின் வழியே அந்த பெண்ணுடன் குர்பிரீத்துக்கு அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அது நட்பாக தொடங்கி, பின்னர் அந்த பெண்ணை குர்பிரீத் காதலிப்பது வரை சென்றுள்ளது. ஆனால், அந்த இளம்பெண்ணுக்கு மற்றொரு காதலரும் இருக்கிறார் என அறிந்ததும் குர்தீப் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது அவருக்கு பிடிக்கவில்லை.
இதன்பின்னர், அவரை சந்திக்க வேண்டும் என்றும் அதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும்படியும் குர்பிரீத் அழைத்திருக்கிறார்.
இதனை நம்பி அந்த இளம்பெண்ணும் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடைய கைகள் மற்றும் கால்களை குர்பிரீத் சங்கிலியால் கட்டியிருக்கிறார். அடுத்த 10 நிமிடங்களில் ஆச்சரியம் தரவுள்ளேன் என அவரிடம் குர்பிரீத் கூறியிருக்கிறார். ஆனால், அதன் பின்பு அவரை கழுத்து பகுதியை நெரித்து, மூச்சு திணற செய்து கொலை செய்துள்ளார்.
இதன்பின்பு, மற்றொரு இளம்பெண்ணின் ஐ.டி.யை பயன்படுத்தி ஒரு காரை வாங்கியிருக்கிறார். அந்த காரிலேயே அந்த உடலை போட்டு வைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.